ஆளும் லிபெரல் அரசின் அமைச்சரவை மாறுகிறது: போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ..!!
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை அமைச்சரவை மாற்றத்துடன் தமது அரசின் புதிய ஆண்டை ஆரம்பிக்கின்றார்.திங்கள்கிழமை மாலை வரை மாற்றங்கள் குறித்த விவரங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.
இது தொடர்பாக கனடிய அரச தரப்பு தெரிவிக்கையில், இந்த மாற்றம் சிறியது எனவும் , இது ஒரு அமைச்சரவை உறுப்பினர் பதவி விலகுவதற்கான முடிவால் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மாற்றங்கள் ஏற்படவுள்ளவேளையில், அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் பங்கேற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்க உள்ளனர்.
அந்த வகையில் புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சர் நவ்தீப் பெய்ன்ஸ் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அறிவித்த நிலையில் நிலையில் அவர் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட உள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ அதிலிருந்து மாற்றப்பட்டு புதிய வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளை இதுவரை காலமும் வெளிவிவகார அமைச்சராக இருந்த பிராங்கோயிஸ் பிலிப் சாம்பெயின், நவ்தீப் பெய்ன்ஸ் வகித்த கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் டொராண்டோ பகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒமர் அலகப்ரா புதிய போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
கொரோனா நோய்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப,இன்று காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா முற்றிலும் மெய்நிகர்வழியாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜனவரி மாதம் ட்ரூடோ தனது அமைச்சரவையை மாற்றுவது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இவ்வாறான மாற்றங்கள் நடைபெற்றது.
அதேபோன்று அண்மையில் முன்னாள் நிதியமைச்சர் பில் மொர்னோபதவி விலகிய பின்னர் கடந்த ஒகஸ்ட் மாதம் ட்ரூடோ தனது அமைச்சரவையை மாற்றியிருந்தார். அந்த நேரம் நிதியமைச்சராக கிறிஸ்டியா பிரீலேண்ட் பதவி ஏற்றிருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.