அமெரிக்க அதிபர் டிரம்பின் தனிநபர், அதிகாரப்பூர்வ மற்றும் குழு கணக்குகளை அடுத்தடுத்து முடக்கம் டுவிட்டர் அதிரடி..!!
2021-01-09 03:04
உலகச் செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்பின் தனிநபர், அதிகாரப்பூர்வ மற்றும் டீம் கணக்குகளை அடுத்தடுத்து முடக்கம் செய்து டுவிட்டர் நடவடிக்கை எடுத்து உள்ளது.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதனை உறுதிசெய்து, சான்று அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம் கடந்த 6ந்தேதியன்று நடைபெற்றது.
அப்போது, தோல்வி அடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, வன்முறையில் இறங்கினர். துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத வகையில் அரங்கேறிய வன்செயல்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்தது. கண்டனங்கள் குவிந்தன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள், இந்த வன்செயல்களை கண்டித்ததுடன் சட்டவிரோதமான போராட்டங்களால் ஜனநாயக செயல்முறைகளை தகர்த்து எறிந்து விட முடியாது என கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வன்முறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து இருக்கிறது.
டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்ட பிரையன் சிக்நிக் என்ற போலீஸ் அதிகாரி, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டபொழுது, பலத்த காயமடைந்து உள்ளார்.
இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அதில் பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
இதனிடையே தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கின.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், டிரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்கின்ற (பாலோயர்கள்) 88 மில்லியன் பேர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட சூழலில், அவர் தனது அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசு கணக்கில் இருந்து டுவிட்டர் பதிவுகளை வெளியிட தொடங்கினார். அதில், சுதந்திர பேச்சுக்கு தடை விதிக்கும் வேலையில் டுவிட்டர் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகிறது. இதனை நான் நீண்டகாலம் ஆக கூறி வருகிறேன்.
ஜனநாயக கட்சியினருடன் டுவிட்டர் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் என்னை அமைதிப்படுத்த முயல்கின்றனர். டுவிட்டரில் என்னை பின்தொடரும் 7.5 கோடி பேரையும் அமைதிப்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.
எனினும், ஒரு சில நிமிடங்களில் டிரம்பின் அதிகாரப்பூர்வ அரசு கணக்கான பாட்டஸ் (POTUS) கணக்கும் முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டீம் டிரம்ப் என்ற பெயரில் டிரம்பின் குழுவினர் மற்றொரு டுவிட்டை வெளியிட்டனர். எங்களை அமைதிப்படுத்த முடியாது. சுதந்திர பேச்சுக்கு டுவிட்டர் ஏற்றதில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து அந்த கணக்கும் முடக்கப்பட்டு உள்ளது.