கனடிய மண்ணில் நடைபெற்றுவரும் தமிழர்களின் செயற்பாடுகள் மட்டில் கொதித்துப்போயுள்ளது சிறிலங்கா அரசாங்கம். கடந்த செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்வு இதனைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கனடாவிலுள்ள ஒன்ராறியோ மானில சட்டமன்றத்தில் 'தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்' என்னும் பெயரிலான சட்டமூலம் ஒன்று (Bill 104) கனடியத் தமிழரான சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்டிருந்தது. இது, அதன் முதற்கட்ட வாசிப்பினை நிறைவுசெய்து சட்டமாக நிறைவேற்றுவதற்கான இறுதிக்கட்டத்தில் உள்ளது. இது சட்டமாகும் பட்சத்தில் ஒன்ராறியோ மானிலத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் தமிழர் இன அழிப்பு விவகாரம் பாடமாகக் கற்பிக்கப்படுவதுடன் மே 18 வாரம் தமிழின அழிப்பு மட்டுமல்லாது, உலகில் நடைபெறும் இன அழிப்புகளுக்கு எதிரான விழிப்புணர்வுக் கல்வி வாரமாகவும் கடைப்பிடிக்கப்படும். இந்த விவகாரந்தான் சிறிலங்கா அரசினைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
இது குறித்து முன்னாள் வட மாகாண ஆளுநரும், தற்போதைய ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நியமன எம்.பி.யுமான திரு. சுரேன் ராகவன் கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். அதில் அவர் மேற்படி சட்டமூலம் 104 ஒன்ராறியோ மானிலத்தில் சட்டமாகக் கொண்டுவரப்பட்டால் அது சிறிலங்கா அரசுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், எனவே அதனை உடனடியாக சிறிலங்கா ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச தலையிட்டுத் தடுத்து நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் உரையாற்றிய அவர், கனடாவில் வாழும் தமிழர்கள் சிறிலங்காவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும், அவர்கள் இதனை உடனடியாகக் கைவிட்டு சிறிலங்கா அரசுடன் நல்லிணக்கம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வருமாறும் அறைகூவல் விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு இவர் கனடாவுக்கு வருகை தந்தபோது கனடாவிலுள்ள சில தமிழ் அரசியல் மற்று வணிகப் பிரமுகர்களைச் சந்தித்து நல்லிணக்கம் தொடர்பாக உரையாடியதுடன், மேற்படி 104வது சட்டமூலத்தினை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்ததாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
தொடர்புபட்ட செய்திகள் : தமிழின அழிப்பு தொடர்பான தனி நபர் சட்டவரைபான -104 வரைபுக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் போர்க்கொடி..!!